SPONCERS

Tuesday, October 21, 2014

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘லிங்கா’. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். காமெடி கதாபாத்திரத்தில் சந்தானம் நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு, சில தினங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் படக்குழு தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இப்படத்தை ரஜினியின் பிறந்த நாளன்று வெளியிட முடிவு செய்திருந்த படக்குழு, தற்போது படத்தை பொங்கலுக்கு ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12- தேதி படத்தின் ஆடியோவை வெளியிட உள்ளதாக தெரிகிறது.
பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். பொங்கலுக்கு அஜீத்-கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்குத் திரையுலகில் தற்போது இரண்டு படங்களுக்கு இடையேயான ஆரோக்கியமான போட்டி ஆரம்பமாகியுள்ளது. ‘நான் ஈ’ படத்தை இயக்கிய ராஜமௌலி ‘பாகுபலி’ என்ற சரித்திரப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படம் ஒரு சரித்திரப் படமாக உருவாகி வருகிறது.
தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த குணசேகர் இயக்கத்தில் ‘ருத்ரமாதேவி’ என்ற மற்றொரு சரித்திரப் படமும் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் அனுஷ்கா, ராணா டகுபதி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.ஒரே சமயத்தில் இரு வேறு சரித்திரப் படங்கள் தெலுங்குத் திரையுலகில் உருவாகி வருகிறது. இந்த இரண்டு படங்களும் தமிழிலும் வெளியாக உள்ளன. இரண்டிலுமே அனுஷ்கா, ராணா போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
ஒரு பக்கம் இவை கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்தினாலும் இரு இயக்குனர்களும் அவரவர் பாணியில் படங்களை இயக்கி வருகிறார்கள். சில நாட்களுக்கு முன் பிரபாஸ் இடம் பெற்றுள்ள ‘மகாபலி’ படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டிருந்தார்கள். புஜபல பராக்கிரமத்துடன் பிரபாஸ் உள்ள அந்தப் புகைப்படம் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
இதனிடையே ‘ருத்ரமாதேவி’ படத்தில் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அல்லு அர்ஜுன் இருக்கும் முதல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள். இரண்டு போஸ்டர்களைப் பற்றியும்தான் இப்போது தெலுங்கு ரசிகர்களிடையே பேச்சு இருந்து வருகிறதாம்.
இந்த இரண்டு படங்களுமே தெலுங்குத் திரையுலகின் தரத்தை மேலும் உயர்த்தும் என திரையுலகினரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ‘ருத்ரமா தேவி’ இன்னும் சில வாரங்களிலும், ‘பாகுபலி’ அடுத்த வருடத்திலும் வெளியாக உள்ளது.
கத்தி படத்தில், லைகா படத்தின் பேனரை அகற்ற தயாரிப்பாளர் தரப்பு மறுத்து வருவதால் கத்தி படம் திட்டமிட்டபடி வெளிவருமா…? என்பது சந்தேகமாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய், சமந்த நடிப்பில் உருவாகியுள்ள படம் கத்தி. இப்படத்தை லண்டனை சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அல்லிராஜா, ராஜபக்ஷேயின் நெருங்கி உறவினர் என்றும், அவருடைய பினாமி என்றும் கூறி இப்படத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆனால், இவ்வளவு எதிர்ப்புகளையும் மீறி கத்தி படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகிவிட்டது. இதனிடையே நேற்று வெளியான கத்தி படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
இந்நிலையில், ”கத்தி” படத்தில் நடித்து இருக்கும் விஜய்யையோ அல்லது இயக்குநர் முருகதாஸையோ நாங்கள் எதிர்க்கவில்லை, லைகா என்ற பேனரை மட்டும் அகற்றுமாறு தமிழகத்தில் உள்ள தமிழ் ஆதரவு கட்சிகள் கூறி வருகின்றனர். ஆனால் தயாரிப்பு தரப்பு இதனை ஏற்க மறுத்துவிட்டது.
இதனால் கத்தி திரையிடப்படும் தியேட்டர்களில் நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வோம், படத்தை திரையிட விட மாட்டோம் என்று தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடைய ஐயங்கரன் கருணாமூர்த்தி, சென்னை கமிஷனரை சந்தித்து, ”கத்தி” திரையிடப்படும் தியேட்டர்களில் பாதுகாப்பு கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
இப்படியாக தமிழ் அமைப்புகள் எதிர்த்து வருவது, தியேட்டர்களில் பாதுகாப்பு கேட்டு தயாரிப்பு நிறுவனம் முறையிட்டு இருப்பது உள்ளிட்ட பிரச்னைகளால் இன்னும் தியேட்டர்களில் முன்பதிவு தொடங்கவில்லை. மதுரை உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தியேட்டர்கள் புக்காயுள்ளன.
சென்னையில் பெரும்வாரியான தியேட்டர்களில் இன்னும் புக்கிங் தொடங்கவில்லை. இதுகுறித்து சென்னையில் உள்ள தியேட்டர்களில் தொடர்பு கொண்டு கேட்டபோது, கத்தி படத்திற்கான புக்கிங் இன்னும் ஆரம்பமாகவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனால் கத்தி படம் திட்டமிட்டபடி தீபாவளி தினத்தன்று ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருந்தாலும் அனைத்து பிரச்னைகளும் இன்று இரவுக்குள் முடிந்துவிடும் என்று தயாரிப்பு தரப்பு தெரிவித்து இருக்கிறது.
தீபாவளிக்குத் திரைக்கு வரும் படங்களில் பலரும் ‘கத்தி’ படத்தைப் பற்றி மட்டுமே பேசி வருகிறார்கள். அதே தினத்தில் வெளிவரும் ‘பூஜை’ படத்தைப் பற்றிய பேச்சு குறைவாகவே இருக்கிறது. விஜய்க்கு இருக்கும் லட்சக் கணக்கான ரசிகர்களே அதற்குக் காரணம். சமூக வலைத்தளங்களில் கூட ‘கத்தி’ படத்தைப் பற்றித்தான் நல்ல விதமாகவோ, கெட்ட விதமாகவோ கமெண்ட்டுகள் அடிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், ‘பூஜை’ படத்தைப் பற்றி யாருமே கண்டுகொள்ளவில்லை. இருந்தாலும் ‘பூஜை’ படம் ‘கத்தி’க்கு சிறிதும் குறைவில்லாமல் அமைதியாக ஒரு சாதனையைப் படைத்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மற்ற மாநிலங்கள், உலகம் முழுவதும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளதாம்.தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 400 திரையரங்குகள், தெலுங்கில் சுமார் 500 திரையரங்குகள், கேரளா, கர்நாடகா மற்றும் உலகமெங்கும் வெளியாகும் திரையரங்குகளைக் கணக்கில் கொண்டால் 1200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னணி கமர்ஷியல் இயக்குனரான ஹரி, தெலுங்கில் முன்னணி ஹீரோயினான ஸ்ருதிஹாசன் ஆகியோர் இருப்பதால் தெலுங்கிலும் படத்திற்கு நல்ல வியாபாரம் நடந்துள்ளதாம்.
அதோடு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து சமீபத்தில் வெளியாகிய ‘கோவிந்துடு அந்தாரிவாடிலே’ படமும் நல்ல வெற்றி பெற்று அவருக்கு மீண்டும் ஒரு ஹிட்டைக் கொடுத்துள்ளதாலும், ‘பூஜை’ படம் தெலுங்கில் தமிழை விட அதிக திரையரங்குகளில் வெளியாகிறது என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘பூஜை’ படத்துடன் தமிழில் ‘கத்தி’ படமும், தெலுங்கில் ‘கார்த்திகேயா’ என்ற படமும் மட்டுமே போட்டியாக வெளியாகிறது. ‘கத்திக்கும், கார்த்திகேயாவுக்கும்’ வெற்றி பெற ‘பூஜை’ தேவைப்படுகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்ற சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் அஜீத்.
சிவா இயக்கிய வீரம் படத்தில் நடித்தபோதே அவர் சொன்ன கதையைக் கேட்டு ஓகே சொன்னார் அஜீத். வீரம் படம் வெளியாகி வெற்றியடைந்ததும் சில நாட்கள் ஓய்வுக்குப்பிறகு, அஜீத் நடிக்கும் புதிய படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை தொடங்கினார் சிவா. தற்போது ஸ்கிரிப்ட் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாம்.
சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜித்துடன் சந்தானமும் நடித்திருந்தார். அந்தப் படத்தில் சந்தானத்திற்கு சிறிய கேரக்டர்தான் தரப்பட்டிருந்தது. தற்போது இயக்கும் படத்தில் சந்தானத்திற்கு அஜீத்துடன் படம் முழுக்க வருவதுமாதிரியான கேரக்டரை உருவாக்கியிருக்கிறாராம் சிவா.
இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே நேரம், அஜீத் சிவா இணையும் படத்துக்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்ற தகவலும் அடிபடுகிறது.
தல 56 படத்திற்கு தயாரிப்பாளர் யார்?
விஜய்-சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்சன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
தீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் இப்படத்தின் பாடல் டீசர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 3 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட ‘ஆத்தி’ பாடல் டீசர் ஒருநாளிலேயே 7 லட்சும் பார்வையாளர்களை தொட்டது.
இந்நிலையில், நேற்று விஜய் தனது சொந்தக்குரலில் பாடிய ‘செல்ஃபி புள்ள’ பாடலின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது. பிரம்மாண்ட அரங்கில், விஜய்-சமந்தா ஆடிப்பாடிய இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒருநாளில் மட்டும் இந்த பாடல் டீசரை 9 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
‘ஆத்தி’ டீசர் வெளியிடப்பட்டு 3 நாட்கள் ஆன நிலையில், இதுவரை 10 லட்சத்து 89 ஆயிரத்து 83 பேர் பார்த்துள்ளனர். இன்று ‘கத்தி’ படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Design by | B L - p | N